காந்தி டாக்ஸ்: விஜய் சேதுபதி முதலில் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி படிப்படியாக வளர்ந்து கதாநாயகனாக வளர்ந்தார். அவர் நடித்த ‘பீட்சா’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு அவர் நடித்த் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘நானும் ரவுடிதான்’, ‘சேதுபதி’, ’96’ ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்களில் அவரது நடிப்புத் திறமை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்தார். தன்னால் வில்லன் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் மூலம் நிரூபித்தார்.
அதை தொடர்ந்து அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே வரிசையில் தளபதி விஜய்யுடன் இணைந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அருமையாக இருந்தது. இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கமல் ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்திலும் இணைந்தார். இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி பாலிவுட்டிலும் இணைந்துள்ளார்.
விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’, பாலிவுட்டில் ‘Merry christmas’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து அட்லீயின் ஜவான் படத்திலும் இணைய உள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி டாரக் காமெடி ஜானரில் நடித்துள்ள ‘காந்தி டாக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள படம் வசனம் ஏதுமின்றி மெளனப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அவருடன் அரவிந்த் சாமி, அதிதி ராவ், பாலிவுட் நடிகர் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. கரண் ராவத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த 1987 ம் ஆண்டு கமல், அமலா நடிப்பில் வெளியான ‘பேசும் படம்’ என்ற திரைப்படம் இதேபோன்று டார்க் காமெடி ஜானரில் மெளனப்படமாக வெளியானது. இதே போல் உருவாகியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ படத்தில் எல்லோர் கைகளிலும் தீயதை பார்க்காதே, தீயதை பேசாதே, தீயதை கேட்காதே என்பதை குறிக்கும் குரங்கு பொம்மை உள்ளது. இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வரவிருப்பதாக டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.