வாழப்பாடி முனியப்பன்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சியில் 150 ஏக்கரில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியின் நடுவே அஞ்சலான் குட்டை முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இவ்வழியே செல்லும் பொதுமக்களை தாக்கி கொள்ளையர்கள் நகை, பணம் இவற்றை கொள்ளையடித்ததாகவும் அதை முனியப்பன் செய்ததாக தகவல் பரப்பியதாகவும், பின்னர் அவர்களை முனியப்பன் தண்டித்ததாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன. இதையடுத்து சிங்கிபுரம், பழனியாபுரம், வேப்பிலைப்பட்டி, வாழப்பாடியை சேர்ந்த பொதுமக்கள் முனியப்பனை வனக்காவல் தெய்வமாக வழிபட்டுவருகின்றனர்.
சுமார் 200 ஆண்டுகள் பழமையான அஞ்சலான் குட்டை முனியப்பன் கோயிலில் ஆண்கள் மட்டுமே தொடர்ந்து பூஜை செய்து வருகின்றனர். பெண்கள் யாரும் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவதில்லை. பொங்கல் வைத்து, கிடா வெட்டி பூஜை செய்த பின் சமையல் செய்வதற்கு கூட பெண்கள் யாரும் இப்பகுதிக்கு வருவதில்லை. சமையலுக்கு தேவையான பொருள்களை கூட பெண்கள் யாரும் தொடக்கூடாது எனவும், ஆண்டு ஆண்டாக இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் ஆண்கள் வழிபாடு செய்த பின்னர் திருநீறை கூட வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது எனவும், அதை கொண்டு பெண்களுக்கு கொடுத்தால் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் வரும் என்றும் கூறுகின்றனர்.
இக்கோயிலில் நினைத்த காரியம் நிறைவேற வழிபாடு செய்யும் பக்தர்கள் அவரவர் வேண்டுதலுக்கேற்ப சிலைகளை கோயிலின் வெளிப்புறத்தில் வைக்கின்றனர். குறிப்பாக குழந்தை வரம் வேண்டுவோர்கள் குழந்தை வடிவில் சிலை வைத்து வணங்குகின்றனர். அப்படி வணங்குவதால் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதாக கூறுகின்றனர். கிராமத்தை காக்கும் வனக்காவல் தெய்வமாக அஞ்சலான் குட்டை முனியப்பன் கோயில் திகழ்வதாகவும், இக்கோயிலில் ஆண்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்வதாகவும் இப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.