புஷ்பாபிஷேகம்: சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டு நாள்தோறும் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சிறப்பு பூஜைக்கும் பக்தர்கள் முன்பதிவு செய்து அந்த குறிப்பிட்ட நேரத்தில் பூஜையில் பங்கேற்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் ஐயப்பனுக்கு காலையில் இருந்து நடைபெறும் நெய்யாபிஷேகம் போன்ற பூஜைகளால் ஏற்படும் உஷ்ணத்தை குறைக்க தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை ‘புஷ்பாபிஷேகம்’ நடைபெறும். இந்த சிறப்பு பூஜையை காண திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை சன்னதிக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான பூஜையும் புஷ்பாபிஷேகம்தான். அதே நேரம் உத்திஷ்டகாரிய சித்திக்கு செய்யப்படும் புஷ்பாபிஷேகம் சுவாமி ஐயப்பனுக்கும் மிகவும் பிடித்தமானது என்று நம்பப்படுகிறது. சபரிமலை தந்தரி தலைமையில் நடைபெறும் புஷ்பாபிஷேகத்திற்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புஷ்பாபிஷேகத்திற்கு தாமரை, தத்தி, துளசி, கூவளம், அரளி, சாமந்தி, மல்லிகை மற்றும் ரோஜா உள்ளிட்ட எட்டு வகையான மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மலர்கள் அனைத்தும் நேரடியாக தேனி, திண்டுக்கல் மற்றும் ஒசூர் பகுதிகளில் இருந்து வாங்கப்படுகிறது. சன்னிதானத்தில் தினமும் 12 புஷ்பார்ச்சனைகள் நடைபெறுகின்றன. நவம்பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை 461 புஷ்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன.
சபரிமலையில் புஷ்பாபிஷேகம் மட்டுமின்றி அஷ்டாபிஷேகம், களாபிஷேகம், நெய்யபிஷேகம், மாளிகைபுறத்தில் பகவதிசேவை உள்ளிட்டவையும் முக்கிய பூஜைகள். காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை அஷ்டாபிஷேகமும், மதியம் 12.30 மணிக்கு களாபிஷேகமும், அதிகாலை 3.30 மணி முதல் 7 மணி வரை நெய்யாபிஷேகமும் நடைபெறுகிறது.