மாமன்னன்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் சில காட்சிகளை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். முதல் முறையாக உதயநிதி நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இப்படம் திரையில் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படி இருக்கையில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் தீப்புகைக்கு முன் உதயநிதி கையில் வாளுடன் இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த கிளிம்ப்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக வைகைப்புயல் வடிவேலுவின் கதாபாத்திரம் தான் மாமன்னன் என்ற படத்தின் தலைப்புக்கு உரித்தானது என்று படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜும் படத்தின் நாயகன் உதயநிதியும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.