ஏர்டெல் 5ஜி: சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டிற்கான 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில் ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நிறுவனங்கள் பங்கு பெற்றன. இதில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோ ஏலத்தில் முன்னிலை பெற்று நாட்டின் முதல் 5ஜி சேவையை தொடங்கியது. முதலில் நாட்டின் முக்கிய நகரங்களில் தனது 5ஜி சேவையை தொடங்கிய ஜியோ நிறுவனம் வரும் 2023ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவை தொடங்கப்படும் என அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவை தொடங்கப்படும் என அறிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து இன்று ஏர்டெல் நிறுவனம் சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களுரு உள்ளிட்ட 8 நகரங்களில் தனது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. ‘ஏர்டெல் 5ஜி ப்ளஸ்’ என்ற பெயரில் 5ஜி சேவையை தொடங்கியுள்ள ஏர்டெல் நிறுவனம் படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளிலும் 5ஜி சேவை விரைவில் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளது. 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில், தற்போது பயன்படுத்தி வரும் டேட்டாபிளான்களிலேயே அதிவேக இணைய சேவயை தொடரலாம் என ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், 4ஜி இணைய சேவையை காட்டிலும் 5ஜி சேவை 30 மடங்கு வேகமாக இருக்கும் என்றும், வாய்ஸ் கால் துல்லியமாக இருக்கும் என்றும் ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இச்சேவை மூலம் இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் வலுப்பெறும். கிராமப்புறங்களில் உள்ள மக்களும் இணையத்தை எளிதாக பயன்படுத்தும் வகையில் 5ஜி சேவை அதிவேகமாக அமையும். 5ஜி சேவை இந்திய மக்களுக்கு கிடைத்த பரிசு என்று பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.