வாரிசு-துணிவு: அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். அதேபோல் விஜய் நடித்துள்ள வாரிசு படமும் பொங்கலன்று திரைக்கு வருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இந்த இரண்டு ஹீரோக்களின் படங்கள் ஒன்றாக பொங்கல் தினத்தன்று திரைக்கு வருகின்றன. இதனையடுத்து இரண்டு படங்களும் ஒரே நாளில் திரைக்கு வருவதால் இந்த இரு நடிகர்களிடையே மோதல் நடப்பதாகவும் இவர்களின் ரசிகர்களை மோதவிட்டு பார்க்கவே இது போல் படங்களை ஒன்றாக வெளியிடுவதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி விஜய் எதுவும் பேசாமல் இருக்கிறார். ஆனால் அஜித் தனது தரப்பு விளக்கத்தை நேரடியாக சொல்லாமல் சூசகமாக தெரிவித்துள்ளார்.
தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உங்களை சிறப்பாக செய்யத் தூண்டும் நபர்களை உங்களை சுற்றி வைத்து கொள்ளுங்கள். நாடகமோ நெகட்டிவிட்டியோ இதில் இல்லை. உயர்ந்த இலக்குகள் உயர்ந்த உத்வேகம் மட்டுமே இருக்க வேண்டும். சிறந்த நேரமும் பாசிடிவ் எனர்ஜியும் வேண்டும். பொறாமையோ வெறுப்போ இல்லை. ஒருவருக்கு ஒருவர் தங்களின் சிறந்த விஷயங்களை வெளியே கொண்டு வருவதுதான் முக்கியம். வாழு…வாழவிடு. அளவு கடந்த அன்புகள். இப்படிக்கு அஜித் குமார்’ என்று கூறப்பட்டுள்ளது.
விஜய் மீது பொறாமையோ வெறுப்போ இல்லை என்றும் ஒருவருக்கு ஒருவர் சிறந்த விஷயத்தை வெளியே கொண்டு வருவதுதான் முக்கியம் என்றும் இந்த அறிக்கையில் விஜய் பற்றி சூசகமாக அஜித் தெரிவித்துள்ளார் என சினிமா வல்லுநர்கள் கூறுகின்றனர்.