அஞ்சலி: நடிகை அஞ்சலி நடித்துள்ள ‘ஃபால்’ தமிழ் வெப்சீரிஸ் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதில் சோனியா அகர்வால், எஸ்.பி.பி.சரண், சந்தோஷ் பிரதாப் உள்பட பலர் நடித்துள்ளனர். சித்தாரத் ராமசாமி இயக்கியுள்ளார். இது குறித்து அஞ்சலி கூறியதாவது.
ஓடிடியின் வளர்ச்சி கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரமாக உள்ளது. இதற்கு காரணம் கொரோனா சமயத்தில் மக்கள் ஓடிடியை அரவணைத்ததுதான். இப்போது அது அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. தியேட்டரில் வெளியாகும் படங்கள் கூட மூன்றே வாரங்களில் ஓடிடியில் வெளியாகி விடுகிறது. அதற்கு டிமாண்ட் தான் காரணம். இதனால் வெப்சீரிஸ்களில் நடிகர், நடிகைகள் நடிப்பது நல்ல அறிவு சார்ந்த முடிவு. அதனால் தான் நானும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்துகிறேன். ஃபால் திரில்லர் டிராமாவாக அமைந்துள்ளது.
பிற மொழிகளிலும் அதிகம் நடிக்கிறேன். அதனால் தமிழில் என்னால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது புதிதாக நிறைய பேர் நடிக்க வருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது மனதளவில் நீங்கள் வலுவாக இருங்கள். மனதளவில் நீங்கள் தளர்ந்து விட்டால் சினிமாவில் நிலைக்க முடியாது. நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் பக்குவமும் இருக்கேண்டும்.
திருமணம் பற்றி கேட்ட போது, திருமணத்தை பற்றி இப்போதைக்கு எதையும் யோசிக்கவில்லை. வீட்டில் திருமணம் செய்ய வற்புறுத்துவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் எனது பட வாய்ப்புகளை பார்த்த பிறகு அமைதியாகிவிடுவார்கள். திருமணம் இப்போதெல்லாம் சினிமாவுக்கு தடையாக இல்லை. எல்லா நடிகைகளுமே திருமணத்துக்கு பிறகு இப்போது நடிக்க வருகிறார்கள். அதனால் நானும் சினிமாவை விட்டு போக மாட்டேன் என்று அஞ்சலி கூறினார்.