அசாம்: அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஆர்ஜி பருவா சாலையில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான வழக்கில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி இயக்கத்தை சேர்ந்தவராக கூறப்படும் மாணவர் சஞ்சிப் தலுக்தார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
படிப்பின் மீதான தீராத ஆர்வத்தால் சஞ்சிப் சிறையில் இருந்தவாறே கிருஷ்ண காந்தா ஹேண்டிக்யு திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ சமூகவியல் படிப்பில் சேர்ந்தார். சிறையில் இருந்தாலும் மனம் தளராமல் படித்த சஞ்சிப் முதுகலை படிப்பில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சிறைக் கம்பிகளுக்கு பின்னால் உள்ள அவருக்கு அசாம் ஆளுநர் ஜெக்தீஷ் முகி தங்கப் பதக்கம் வழங்கி கெளரவித்தார்.
இந்த சம்பவம் சஞ்சிப் குடும்பத்தினரை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சஞ்சிப் சகோதரி டோலி கூறுகையில், ‘இது எங்களுக்கு மகிழ்ச்சியும், சோகமும் கலந்த தருணம். என் சகோதரருக்கு தங்கப் பதக்கம் கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறமிருந்தாலும் அவர் இன்னும் சிறையில் இருப்பது வேதனை தருகிறது. அவர் நிரபராதி என்பது எங்களுக்கு தெரியும். விரைவில் நீதி கிடைக்கும் என நம்புகிறோம்’ என்று அவர் தெரிவித்தார்.