சீத்தாப் பழம்: சீதாப்பழம் மருத்துவ குணங்கள் மிகுந்த ஒரு பழமாகும். இதன் தோற்றம் வெளிப்புறத்தில் வித்தியாசமாக இருந்தாலும் உட்புறம் மிருதுவாகவும், வெண்மை நிறத்திலும், இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும். சீதாபழத்திற்கு ஆங்கிலத்தில் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்று ஒரு பெயர் உண்டு. ‘கஸ்டர்ட்’ என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. தமிழில் சர்க்கரை ஆப்பிள் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
சீத்தாப் பழத்தின் நன்மைகள்
சீத்தாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த செல்களின் அளவு அதிகரித்து ஹீமோகுளோபின் அளவு உயரும். இரத்த சோகை குணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினம் தூங்குவதற்கு முன்பு ஒரு சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆழ்ந்த உறக்கம் வரும். மன அழுத்தம் குறையும். இப்பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரித்து உடல் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காணப்படும்.
சீத்தாப்பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை கட்டுக்குள் வைக்கும். உடலுக்கு தேவையான கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் இப்பழத்தில் நிறைந்துள்ளது. வைட்டமின் பி, சி போன்ற சத்துக்களும் இப்பழத்தில் நிறைந்துள்ளது. ஏழைகளின் ஆப்பிள் என்றே இப்பழத்தை குறிப்பிடலாம்.
சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
இப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் சீராக செயல்பட்டு மாரடைப்பிலிருந்து உயிரை காக்கிறது. மேலும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
இப்பழம் மூச்சுக்குழாய்களில் சீராக செயல்பட்டு மூச்சுத்திணறல், ஆஸ்த்துமா போன்ற நுரையீரல் நோய்கள் வராமல் தடுக்கிறது.
இப்பழம் சருமவறட்சியை தடுத்து தோல் நோய்கள் வராமல் காக்கிறது. சிறுநீரகம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. கண்களின் வறட்சியை தடுத்து பார்வை கோளாறுகளை சரி செய்கிறது. மூட்டு வலிகளை குணப்படுத்துகிறது.
இப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தை அளவாக உட்கொள்ள வேண்டும். இதில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகளவில் இருப்பதால் மூளை நரம்புகளையும் திசுக்களையும் சிறப்பாக செயல்பட வைக்கும்.
தற்போதைய ஆய்வு ஒன்று புற்றுநோய் செல்களுக்கு எதிராக சீ்த்தாப்பழம் செயல்படுவதாக தெரிவித்துள்ளது. இப்பழம் முதுமையை தடுத்து இளமையை நீண்ட காலம் தக்க வைக்கிறது. இப்பழத்தை அப்படியே சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை கேக், சேலட், ஐஸ்கிரீம் போன்றவைகளில் பயன்படுத்தினால் மிகவும் சுவை நிறைந்ததாக இருக்கும்.