சிதம்பரம் நடராஜப் பெருமானின் ஆனி திருமஞ்சன திருவிழா ஜூன் 27 ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பஞ்சபூத தலங்களில் ஆகாயமாக விளங்கும் தலம் ஆடவல்லான் பொன் செய்த மேனியனாகவும் இருக்கிறான். பிரசித்திப் பெற்ற திருத்தலமாகவும் பக்தர்களின் இன்னலைப் போக்கும் ராஜனாக இருக்கிறார் இங்கு குடிக்கொண்டிருக்கும் நடராஜ பெருமான்.
நடராஜ பெருமானுக்கு சித்திரை திருவோணம், ஆனிஉத்திரம், ஆவணி சதுர்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை என ஆண்டுக்கு ஆறு விஷேஷ அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. இதில் ஆனி உத்திரமும் மார்கழி திருவாதிரையும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஓவ்வொரு திருவிழாவின் போதும் பல ஆயிரம் மக்கள் இக்கோயிலில் கூடுவார்கள்.

ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன விழா ஜூன் 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூலை 7 ம் தேதி வரை பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
அதைத் தொடர்ந்து தினசரி காலை மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. ஜூலை 1ம் தேதி வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் உற்சவம் நடக்கிறது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் உற்சவம் வரும் ஜூலை 5ம் தேதி நடக்கிறது. ஜூலை 6ம் தேதி காலை 3:00 மணி முதல் 6:00 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் அம்பாளுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, ஆனி திருமஞ்சனம் நடக்கிறது. விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதி வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.