சிவிங்கிப் புலிகள்: இந்தியாவில் முற்றிலும் அழிந்துபோன இனமாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் இருந்து தனி விமானத்தின் மூலம் மத்திய பிரதேசத்திலுள்ள குனோ உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 17ம் தேதியன்று சரணாலயத்திற்குள் விடுவித்தார். பொதுவாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு கொண்டு வரப்படும் வனவிலங்குகளுக்கு ஏதேனும் தொற்று நோய் இருந்தால் அது மற்ற விலங்குகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக அவைகள் ஒரு மாத காலத்திற்கு தனிமைப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகள் சுமார் ஒன்றரை மாத தனிமைப்படுத்தலுக்குப்பின், கடந்த நவம்பர் 5ம் தேதி எட்டில் 2 சிவிங்கிப்புலிகள் கூண்டிலிருந்து 5கிமீ சதுர பரப்பளவு கொண்ட வனப்பகுதிக்குள் திறந்து விடப்பட்டன.
இந்த புலிகள் வனப்பகுதிக்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் புள்ளி மான் ஒன்றை வெற்றிகரமாக வேட்டையாடியுள்ளன. நமீபியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பிறகு இந்தியக் காடுகளில் சிவிங்கிப்புலிகள் மேற்கொள்ளும் முதல் வேட்டை இதுவாகும். மற்ற 6 சிவிங்கிப்புலிகளும் இன்னும் தனிமைப்படுத்தலில்தான் உள்ளன. அவைகளுக்கு கால்நடைகளின் இறைச்சி உணவாக வழங்கப்படுகிறது. மற்ற சிவிங்கிப் புலிகளும் படிப்படியாக வனப்பகுதிக்குள் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இந்தியா வந்த 50 நாட்களில் சிவிங்கிப் புலிகள் இங்குள்ள தட்பவெப்பநிலைக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொண்டது சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.