கல்லூரி கனவு நிகழ்ச்சி என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை வெளியானது. தமிழகத்தில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் குழப்பங்களை தீர்க்கவும். 12 ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் அடுத்தக்கட்டமாக என்ன பயில வேண்டும் எந்த துறையில் சேர்ந்து உயர வேண்டும் என்று குழப்பத்தில் இருப்பர். அக்குழப்பத்தை போக்கும் வகையில் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த திட்டத்தை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகள் தங்களுக்கு உயர்கல்விக்கு உள்ள வாய்ப்பு குறித்து பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என பிரிவு வாரியாக அறிய வைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்றவை குறித்தும், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக, உயர்கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், வேளாண்மைப் பல்கலைக் கழகம், டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் ஆகியவை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் முன்னிலையில் HCL நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்த 2 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளை தகுதியின் அடிப்படையில் ஹெச்.சி.எல்., நிறுவனம் தேர்வுசெய்து, பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், பயிற்சிக்கான செலவை அரசு ஏற்பதுடன், பட்ட மேற்படிப்பினை பயில வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் உறுதிசெய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.