காமன் வெல்த் 2022 போட்டியில் இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கத்தை பெற்று தந்தார் இந்திய வீரர் சங்கேத் மகாதேவ் சர்கார்.
22-வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில், 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இதன் தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.
அந்த வகையில் இன்று நடந்த பளுதூக்கும் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் 248 கிலோ எடை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 21 வயதான அவர், ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் வென்ற இந்த வெள்ளிப் பதக்கமே இந்தியாவின் முதல் பதக்கம் ஆகும்.
இதுகுறித்து சங்கேத் மகாதேவ் சர்கார் கூறுகையில், வெள்ளி பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி ஆனால், தங்கப் பதக்கம் வெல்ல முடியவில்லையே என்று வருத்தமாகவும் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தஙகம் வெல்ல பயிற்சி மேற்கொண்டு வந்தேன். இந்நிலையில், முழங்கை காயம் காரணமாக தங்கம் வெல்ல முடியாமல் போனது என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.