சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகனும், நடிகர் முத்துராமனின் பேரனுமான கவுதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் நடித்து வெளியான படம் தேவராட்டம். இந்த படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். அப்போது இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். அண்மையில் தான் சமூக வலைதளத்தில் தங்கள் காதல் குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நிச்சியிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்றது. இத்திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடித்த கையோடு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் கூட்டாக அறிவித்தார்கள். ஆனால் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திரையுலகினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.