குஜராத்: குஜராத்தில் 36வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. பல போட்டிகளில் தமிழக வீரர்கள் அசத்தி வருகின்றனர்.
36வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் உள்ளிட்ட நகரங்களில் நடந்து வரும் போட்டிகளில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த தேசிய விளையாட்டு போட்டிக்காக தமிழ்நாட்டிலிருந்து இந்த வருடம் 380 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இதுவரை நடந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் இவ்வளவு எண்ணிக்கையில் தமிழகத்தின் சார்பாக இதுவரை கலந்து கொண்டதில்லை. அதனால், தமிழக வீரர்கள் பல பதக்கங்களை சொந்தமாக்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு ஏற்றவாறு தமிழக வீரர்கள் களத்திலும் அசத்தி வருகின்றனர். மகளிர் போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ரோசி மீனா 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீராங்கனைகள் பவித்ரா வெள்ளி, பாரனிகா வெண்கலப்பதக்கம் வென்றனர். அதேபோல் மகளிர் 100 மீ, ஓட்டத்தில் மதுரையைச் சேர்ந்த அர்ச்சனா வெள்ளி வென்று அசத்தினார்.
தொடர்ந்து மகளிர் 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கீர்த்தனா, கிரிதரணி, அர்ச்சனா அடங்கிய தமிழக அணி வெள்ளி வென்றது. இதுமட்டுமல்லாமல் ஆடவர் நீளம் தாண்டுதலில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.26 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் வென்றதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆடவர் 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் இலக்கிய தாசன் (10.4 வினாடி), சிவக்குமார் (10.48 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் ராஜேஷ் வெள்ளி கைப்பற்றினார். 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கதிரவன், ஜெயக்குமார், இலக்கிய தாசன், சிவகுமார் ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கம் வென்றது.
மொத்தமாக 12 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என்று மொத்தமாக 33 பதக்கங்களை வென்று தமிழ்நாடு அணி நான்காவது இடத்தில் உள்ளது.