வாணி போஜன்: நடிகர் பரத், வாணி போஜன் நடித்திருக்கும் படம் ‘மிரள்’. இப்படத்தை ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார். காற்றாலை பகுதி ஒன்றில் நடைபெறும் திகில் கதை கொண்ட இந்தப் படத்துக்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சக்திவேல் பேசியதாவது. ‘இப்படத்தில் பரத் நடிப்பது உறுதியாகி அவர் மூலமாக தயாரிப்பாளர் கிடைத்தார். ஹீரோயினுக்காக பல நடிகைகளை யோசித்து வைத்திருந்தேன். வாணி போஜன் போட்டோவை அனுப்பி வைத்த தயாரிப்பாளர், இந்த கேரக்டருக்கு இவர் சரியாக இருப்பாரா என்று பாருங்கள் என்றார். அந்த போட்டோவை பார்த்த எனக்கு வாணி போஜனை பிடிக்கவில்லை. வேறொரு நடிகையை பார்க்கலாம் என்றேன். உடனே அவர் வாணி போஜனை நேரில் சந்தித்து கதை சொல்லுங்கள். பிறகு நாம் பேசுவோம் என்றார். இதையடுத்து வாணி போஜனை சந்தித்தேன்.
நான் உருவாக்கிய கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. படத்தில் நீங்கள் 8 வயது சிறுவனுக்கு தாயாக நடிக்க வேண்டும். அதற்கு சம்மதித்தால் கதை சொல்வேன் என்றேன். வாணி போஜன் சம்மதித்தார். பாதி கதையை சொல்லி முடித்தபோது மீதி கதையை சொல்ல வேண்டாம். இனிமேல் எந்த நடிகையிடமும் இந்தக் கதையை சொல்ல மாட்டேன் என்று உறுதி அளித்தால் நான் நடிக்கிறேன் என்றார். அவர் சொன்னதில் நியாயம் இருந்ததால் ஒப்புக்கொண்டேன். பிறகு வாணி போஜன் சிறப்பாக இப்படத்தில் நடித்திருக்கிறார்’ என்ற அவர் கூறினார்.