அவதார்: 2009ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் அவதார். அனிமேஷன் கலந்த படமாக இது உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் அனிமேஷன் காட்சிகள் உலக புகழ் பெற்றன. பல படங்களின் பாக்ஸ் ஆபீஸ் சாதனையை இந்த படம் முறியடித்தது. இதையடுத்து இந்த படத்தின் 2வது, 3வது மற்றும் 4வது பாகங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகள் கழிந்து விட்டது. இந்நிலையில் இந்த படத்தின் 2ம் பாகம் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியதாவது.
கடந்த 13 ஆண்டுகளில் 2,3,4 பாகங்களுக்கான அனிமேஷன் பணிகள் நடந்து வந்தன. இதில் 2வது பாகத்துக்கு மட்டும் 3 ஆண்டுகள் செலவழித்தோம். வரப்போகும் 3 ஆண்டுகளில் 3வது 4வது பாகங்களை வெளியட திட்டமிருந்தோம். ஆனால் இப்போது அந்த பாகங்கள் வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். கொரோனா என்ற கொடுமையான பாதிப்பு ஏற்படும் என நாங்கள் யாருமே நினைக்கவில்லை. அது வந்த பிறகு ஒட்டு மொத்த சினிமா உலகமும் தலைகீழாக மாறியுள்ளது. ஓடிடியின் தாக்கம் பெருகிவிட்டது. உலகம் முழுவதும் தியேட்டருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பல நாடுகளில் கொரோனா அச்சம் இப்போது நீங்கியுள்ளது.
ஆனால் கடந்த 3 வருடமாக ஓடிடிக்கு மாறிவிட்ட பலர் தியேட்டர் பக்கம் வருவதில்லை. தியேட்டருக்கு அவர்களை அழைத்து வர படாத பாடு பட வேண்டியிருக்கறது. அவதார்2 படம் வசூலில் சாதனை புரிய வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திப்போம். 3வது 4வது பாகம் வருவதும் கைவிடப்படும்.