ஜூனியர் என்டிஆர்: லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் ஜுனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்த ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தனது மனைவி லக்ஷ்மி பிரணதியுடன் சென்ற ஜூனியர் என்டிஆர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஐதராபாத் விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவரை காண்பதற்காக விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். மேலும் அவர் விமான நிலையத்தில் இருந்து காருக்குள் ஏறியபோது பத்திரி்க்கை மற்றும் ஊடகங்களால் சூழப்பட்டார். ரசிகர்களும் அவரது காரை சூழ்ந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கூட்டத்தினரை அப்புறப்படுத்தினர். அதன்பின் தனது காரின் மேல் நின்று ரசிகர்களை பார்த்து ஜூனியர் என்டிஆர் கையசைத்து அன்பை வெளிப்படுத்தினார். அப்போது ஜூனியர் என்டிஆர் கூறுகையில், ‘ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ஆஸ்கர் விருதை எம்.எம்.கீரவாணி, சந்திரபோஸ் பெற்றதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கிய ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நாங்கள் வென்ற இந்த விருது சினிமா பார்வையாளர்கள் மற்றும் திரைப்படத் துறையினரின் அன்பால் மட்டுமே சாத்தியமானது’ என்று கூறிவிட்டு கிளம்பினார்.