ரேஷன் கடை பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பாக 270 முதல் 365 நாட்கள் வரை மகப்பேறு வடுமுறை தொடர்பாக தமிழக கூட்டுறவு துறை அரசாணை வெளியீடு. மேலும், அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும் என தகவல் தெரிவித்துள்ளது.
அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் மட்டுமே விடுப்பு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் கவனியுங்கள்: தமிழகத்தில் இன்று முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலாகிறது
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அனைத்து கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க, தேவையான துணை விதி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தகுதியுள்ள அனைத்து பெண் ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுவதை தங்கள் அளவில் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு, அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் சலுகைகள், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு, அரசால் அறிவிக்கப்படும் சலுகைகள் தொடர்பாக, உடனுக்குடன் சங்க துணை விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அச்சலுகைகள் கிடைக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரேஷன் கடைகளில் யூபிஐ பயன்படுத்தி பொருட்கள் வாங்கலாம் என்று அரசாணையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அரசு பெண் ஊழியர்கள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற அன்றாட தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.