ஓணம் பண்டிகையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

0
6

ஓணம் பண்டிகையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்: ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஓவ்வொரு பண்டிகைகள் சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது. அந்த வகையில் நம் தமிழ்நாட்டிற்கு தீபாவளி, பொங்கல், சித்திரைத் திருவிழா போன்றவைகள் சிறப்பு வாய்தவைகளாக உள்ளது. கேரளா மாநிலத்திற்கு மிக முக்கிய‍ பண்டிகையாக விளங்குவது ஓணம் பண்டிகை இது அம்மாநிலத்தில் அனைத்து மதத்தினரும் சாதி, மதம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி கொண்டாடப்படும் பண்டிகையாக இருக்கிறது.

இந்த ஓணம் பண்டிகை அன்று மக்கள் அதிகாலையிலே சுத்தமாக குளித்து புத்தாடை அணிந்து விதவிதமான உணவு வகைகளை சமைத்து அதனை இறைவனுக்கு படைத்து அக்கம் பக்கத்தினருக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். இந்த பண்டிகையை கேரளா மாநில மக்கள் மட்டுமே வெகு விமர்சையாக கொண்டாடுவர்.

கேரள மலையாளி மக்கள் இப்பண்டிகையை 10 நாட்கள் கொண்டாடுவார்கள். இந்தாண்டு ஆகஸ்ட 30ம் தேதி அன்றிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் முக்கிய தினமாக ஓணம் பண்டிகையானது 8ம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இருப்பினும் இவ்ஓணம் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது ஓணம் பண்டிகை வரலாற்று பின்னனி என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? என்பதையும் இப்பதிவில் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: ஆவணி அவிட்டம் என்பது வெறும் பூணுல் பண்டிகையா?

ஓணம் பண்டிகையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

ஓணம் பண்டிகை குறித்த பழமொழி:

”கானம் விற்றேனும் ஓணம் கொண்டாடு” என்பது மலையாள பழமொழி. வசதி-வாய்ப்பற்றவர்கள் தங்கள் வீடுகளில் உணவுக்காக சேமித்து வைத்திருக்கும் கானப்பயறை விற்றாவது ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பது இதன் பொருளாகும். இதில் இருந்து ஓணம் பண்டிகைக்கு கேரள மாநில மக்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள் என்பது நமக்கு புலப்படுகிறது.

ஓணம் பண்டிகையின் வரலாறு:

மன்னன் மகாபலியின் ஆணவம் அடக்கிய வாமண அவதாரம் குறித்த கதையே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இக்கதையில் கேரளாவை ஆண்ட மன்னன் மகாபலி சக்கரவர்த்தி, மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவன். அதற்கேற்ப மக்களும் மன்னன் மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். மன்னரின் ஆணைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றினர். நாட்கள் செல்ல செல்ல மன்னனின் குணம் மாறியது.

அவனிடம் ஆணவமும், செருக்கும் குடி கொண்டது. மன்னரிடம் ஏற்பட்ட மாற்றம் கண்டு மக்கள் மனம் கலங்கினர். அவர்கள் இறைவனிடம் மன்னன் மகாபலியின், ஆணவத்தை அடக்குமாறு முறையிட்டனர். மக்களின் கோரிக்கையை ஏற்ற இறைவன், மகாபலி மன்னனை அடக்க வாமண அவதாரம் எடுத்து அவனது நாட்டுக்கு வந்தார்.

குள்ள உருவத்துடன் முனிவர் போல் காட்சியளித்த அவர். மன்னன் மகாபலியின் முன்பு சென்று தனக்கு தானம் வேண்டுமென கேட்டார். மன்னனும், வாமணர் வேண்டும் வரத்தை தருவதாக வாக்களித்தார். அதை கேட்ட வாமணர், தனக்கு 3 அடி நிலம் மட்டும் வேண்டும் என கேட்டார்.

மன்னனும் அதனை தருவதாக கூறினார். மன்னன் கூறியதும் வாமணர் முதல் அடியை எடுத்து வைத்தார். அது மன்னனின் மொத்த நிலப்பரப்பையும் தாண்டியது. அடுத்த அடியில் விண்ணும் வசப்பட்டது. அடுத்து 3-வது அடியை எங்கு வைக்க வேண்டும் என வாமணன் தூக்கிய காலுடன் நிற்க, அதன்பின்புதான் மன்னன் மகாபலிக்கு தன்முன் நிற்பது முனிவர் அல்ல. இறைவன் என தெரிந்து கொண்டார்.

உடனே உள்ளம் உருகிய அவர், இறைவா என்னை மன்னித்து கொள் என்றபடி 3-வது அடியை தன் தலை மீது வைக்கும் படி கூறி தலை வணங்கி நின்றார். வாமணனும், 3-வது அடியை மன்னன் தலையில் வைக்க அவரது ஆணவம் அகன்றது. செருக்கும் அழிந்தது.

அதன்பின்பு மன்னன் மகாபலி, தன் தவறை மன்னிப்பாயாக என்று வாமணரிடம் கைதொழுது நின்றார். வாமணர் உருவில் வந்த இறைவன், மகாபலியை மன்னித்து அருள்வார். அப்போது மன்னன் தான் நேசிக்கும் மக்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்தித்து செல்ல அனுமதிக்க வேண்டும் என வரம் கேட்டார். வாமண உருவில் வந்த இறைவன், அவருக்கு வரம் அருளி மறைந்தார்.

ஓணம் பண்டிகை பற்றிய குறிப்பு:

ஓணம் பண்டிகை பற்றிய சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் பல நூல்களில் காணப்படுகிறது. சங்க கால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்த நாளாகவும், வாமணர் அவதரித்த தினமாகவும் இந்நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழின் பத்துபாட்டு நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சியில் பாண்டிய நாட்டு மக்கள் இவ்விழாவை 10 நாட்களாக கொண்டாடியதாகவும் கூறப்பட்டுள்ளது.

”கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நல்நாள்” என மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் பாடியுள்ளார்.

ஓணம் விருந்து:

ஓண சத்யா என அழைக்கப்படும் இந்த விருந்தில் அறுசுவைகளில் 64 வகைகளுடன் ஓண விருந்து தயாரிக்கப்படுகிறது. புத்தரிசி மாவில் அடை, அவியல், அடை பிரதமன், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிக்கறி அல்லது இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள், பால் பாயாசம், அடை பாயாசம், சிறுபருப்பு பாயாசம் என பல்வேறு வகையான உணவுகள் தயாரித்து கடவுளுக்கு படைப்பார்கள். பின்னர் நண்பர்கள், விருந்தினர்களுடன் குடும்பமாக அமர்ந்து ஓணம் விருந்தை வாழை இலையில் பரிமாறி மக்கள் ரசித்து, ருசி உண்பார்கள்.

அத்தப்பூகோலம்:

ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக அனைவரின் வீட்டிற்கு முன்னரும் இந்த பத்து நாட்களும் பல வண்ண பூக்களால் அழகாக கோலமிடுவர் இதனை அத்தப்பூ கோலம் என்பர். இதன் ஓரு பகுதியாக வட்டமாக திரிவிக்ரகம் போன்ற வடிவத்தில் இந்த அத்தப்பூ என்ற பூக்கோலத்தை பெண்கள் போடுவர் .

இது ஆண்டுக்கு ஓரு முறை மக்களை சந்திக்கு வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்க்கும் வண்ணம் அனைவரது வீட்டிற்கு முன்னும் அத்தப்பூ கோலம் மிட்டு பெண்கள் அவரை வரவேற்று மகிழ்வர் என்பது பாரம்பரியமாக நடைபெற்றுவரும் நிகழ்வாக இருக்கின்றது.

கேரளாவில் சிங்கம் மாதம் அதாவது ஆவணி மாதத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாக உள்ள காரணத்தினால் மக்கள் பல வண்ண பூக்களை வைத்து வரவேற்று மகிழ்கின்றனர்.

மலையாளி மக்களின் பண்டிகை:

இந்த ஓணம் பண்டிகையை கேரளா மற்றும் மலையாளிகள் வாழும் அனைத்து மாநிலம் மற்றும் ஊர்களிலும் சென்னை, பெங்களூர், கன்னியாக்குமரி, கோவை போன்ற பெரு நகரங்களிலும் சீரும் சிறப்பாக மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் திருவோண பண்டிகை சிங்கம் மாதத்தில், அதாவது தமிழில் ஆவணி மாதத்தின் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும். அன்று முதல் திருவோணம் வரை 10 நாட்கள் இத்திருவிழா கொண்டாடப்படும். 2-ம் நாள் சித்திரை, 3-ம் நாள் சுவாதி, 4-ம் நாள் விசாகம், 5-ம் நாள் அனுஷம், 6-ம் நாள் திருக்கேட்டை, 7-ம் நாள் மூலம், 8-ம் நாள் பூராடம், 9-ம் நாள் உத்திராடம் திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

இந்த நாளில், மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் நகைகளை வாங்குகிறார்கள். பெண்கள் கசாவி புடவை, ஆண்கள் முண்டு அணிகிறார்கள். அதே நேரத்தில் சிறுமிகள் பட்டு பாவாடை அணிகின்றனர். ஓணக்கொடி என்று அழைக்கப்படும் விழாவைக் குறிக்கும் வகையில் பூக்களத்தில் மேலும் ஒரு அடுக்கு மலர்கள் சேர்க்கப்படுகின்றன.

இதன் ஓரு பகுதியாக பலி நடனம் என்ற நடனம் நிகழும். மேலும், ஐந்தாம் நாள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பா ஆற்றில் வல்லம்களி என்ற புகழ்பெற்ற படகுப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் மூதாதையர்களையும் முன்னோர்களையும் வணங்கி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவர். பல்வேறு இடங்களில் புலிகளி நடனம் மற்றும் கைகொட்டுகளி போன்ற நாட்டுப்புற நடனங்கள் ஆடி மகிழ்வர்.

இது போன்ற பண்டிகைகள், ஆன்மீகம், ஜோதிடம், கல்வி, தமிழ் இலக்கியம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை அனுகுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here