ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தால் 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்து இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ப்பட்டுள்ளது. அதன்படி, சினை முட்டை தானம் கொடுத்த சிறுமியின் உண்மையான வயது 16 என்றும், அவரது உண்மையான பெயர் மற்றும் வயது மறைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது தெரியவருகிறது.
அதேபோல், சினை முட்டை தானத்திற்கு, சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தித்து, அதில் ஈடுபட்டது தெரியவருகிறது. ஆதார் அட்டை போலியாக தயாரிக்கப்பட்டது என்று தெரிந்தும் இடைத்தரகர், பெற்றோர் மற்றும் 4 மருத்துவமனைகள் அதனை தவறாக பயன்படுத்தியது தெரியவருகிறது.

விசாரணை அடிப்படையில், ஈரோடு சுதா மருத்துவமனை, சேலம் சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை, ஆகிய 6 மருத்துவமனைகள் முறையே ஏஆர்டி சட்டம் (Assisted Reproductive Act-2021) , ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்கள் மற்றும் PCP NDT Act சட்டப்பிரிவுகள் மற்றும், TamilNadu Clinical Establishment Act ஆகிய சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை மீறி, செயல்பட்டது தெரியவருகிறது.
இன்றுமுதல் 15 நாட்களுக்குள் மேற்கூறிய 4 மருத்துவமனைகளிலும் இருக்கிற, உள்நோயாளிகளை உடனடியாக சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். பின்னர், உரிய சட்ட விதிமுறைகளின்படி, அந்த மருத்துவமனைகளை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மருத்துவதுறை சார்பில் மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் கூறினார்.