ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே கணவர் தனுஷை வைத்து ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்போது அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். அப்படத்திற்கு ‘லால் சலாம்’ என பெயரிட்டுள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இந்த படத்துக்கான ஹீரோயின்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் இப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் நேற்று அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே ரஜினி அவர்கள் ஜெயிலர் பட ஷீட்டிங்கிற்கு பின்பு லைக்கா நிறுவன தயாரிப்பில் நடிக்க இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். லால் சலாம் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம் சமூக பிரச்சினை ஒன்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் அவர்கள் அந்த நாட்களில் சில படங்களில் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களிலும், தமிழில் வள்ளி, குசேலன் உள்ளிட்ட படங்களிலும் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். கடைசியாக அவர் இந்தியில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஷாருக்கான், கரீனா கபூர் நடித்த ‘ராஒன்’ திரைப்படத்தில் சிட்டி என்ற ரோபோ கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன்பின் நீண்ட இடைவெளிக்குப்பிறகு தன் மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் என்ன என்று அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.