ராஷ்மிகா: நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழில் விஜய்யின் ‘வாரிசு’, இந்தியில் ‘மிஷன் மஞ்சு’ மற்றும் ‘அனிமல்’, தெலுங்கில் ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் தான் தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வருவதாக நடிகை ராஷ்மிகா வருத்தத்துடனும், எச்சரிக்கை செய்யும் வகையிலும் இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்களாக சில விஷயங்கள் என்னை தொந்தரவு செய்து வருகின்றன. நான் அதை சொல்ல வேண்டிய நேரம் இதுதான் என்று நினைக்கிறேன். நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன். இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டியது. நான் என் சினிமா வாழ்க்கையை தொடங்கியதில் இருந்தே நிறைய வெறுப்பின் முடிவில் இருக்கிறேன். நிறைய ட்ரோல்களும், எதிர்மறை கருத்துகளும் என்னை நோகடிக்கின்றன. ஒவ்வொருவரும் என்னை நேசிக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளாததால் அதற்கு பதிலாக எதிர்மறையாக உமிழலாம் என்று அர்த்தமில்லை. குறிப்பாக நான் சொல்லாத விஷயங்களுக்காக இணையத்தால் நான் கேலி செய்யப்படும்போது இதயத்தை உடைத்து வெளிப்படையான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
நேர்காணலில் நான் பேசிய சில விஷயங்கள் எனக்கு எதிராகத் திரும்புவதைக் கண்டேன். இணையத்தில் பரப்பப்படும் தவறான செய்திகள் எனக்கும் தொழில் துறையில் மற்றும் வெளியில் உள்ள உறவுகளுக்கும் தீங்கு விளைவிக்கும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அது என்னை மேம்படுத்தி சிறப்பாக செயல்பட தூண்டும். ஆனால் எதிர்மறையான வெறுப்பான கருத்துகளை கூறுவதில் என்ன இருக்கிறது. நீண்ட காலமாக நான் அதை புறக்கணிக்க முயற்சிக்கிறேன். ஆனால் அது இன்னும் மோசமாகிவிட்டது. அதை கைவிடுவோம்.
நான் தொடர்ந்து கடினமாக உழைத்து உங்களுக்காக சிறப்பாக நடிப்பேன். ஏனென்றால் நான் சொன்னது போல, உங்களை மகிழ்விப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாேரும் அன்பாக இருங்கள். நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து துல்கர் சல்மான், ஹன்சிகா உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.