நீரா ஆர்யா: இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் முதல் பெண் உளவாளியாக இருந்தவர் நீரா ஆர்யா. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் உளவாளியாக பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்ததால் தனது கணவரை அவரே சுட்டுக் கொன்றார். இதனால் ஆங்கிலேய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட அவர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தனது மீதி வாழ்க்கையை பூ விற்கும் பெண்ணாக வாழ்ந்து முடித்தார். நேதாஜி இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்க மறுத்ததால் அவரது மார்பகங்களை வெட்டி எறிந்ததாக சொல்லப்படுகிறது.
தற்போது நீரா ஆர்யாவின் வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்தி இயக்குனரும், நடிகையுமான ரூபா அய்யர் ஒரு படம் உருவாக்குகிறார். இதை அவரே இயக்கி, நீரா ஆர்யா கேரக்டரில் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்திய சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்டு தன் வாழ்க்கையையே தியாகம் செய்த பலரைப்பற்றி நாம் அறிந்திருக்கவில்லை. அவர்களில் ஒருவர்தான் நீரா ஆர்யா. அவரைப் பற்றி நிறைய ஆய்வுகள் செய்து, நிறைய புத்தகங்கள் படித்து திரைக்கதை நான் எழுதியுள்ளேன். நீரா ஆர்யா வாழ்ந்த இடங்கள், அவர் இருந்த அந்தமான் சிறை, உளவு பார்க்கச் சென்ற லண்டன் உள்பட அந்தந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. ஒரு முக்கியமான வரலாற்றுப் பெண்மணியை இந்த உலகிற்கு முன்பு கொண்டு வரும் முயற்சிதான் இப்படம்’ என்றார்.