சபரிமலை: கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜையும், 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இந்த ஆண்டு தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சபரிமலை கோயில் வளாகம், பம்பை, திரிவேணி, மரக்கூட்டம், சபரிபீடம் உள்ளிட்ட பகுதிகள் பெரிநாடு மற்றும் கொல்லமூலா பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய ரான்னி தாலுகா பகுதி உள்ளிட்டவை ‘மது மற்றும் போதைப்பொருட்கள்’ இல்லா பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் மது, போதை மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீ்ஸ், கலால் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இந்த தடையை அமல்படுத்தும் வகையில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மட்டுமின்றி சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் அதன் அருகே அமைந்துள்ள பகுதிகளுக்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் வியாபாரிகள் இந்த அறிவிப்பை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக காவல் துறை உதவி ஆணையரின் தலைமையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வரும் நவம்பர் 14ம் தேதி முதல் கண்காணிப்பு பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.