சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காரணத்தால் நாளுக்கு நாள் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நடை திறந்து 12 நாட்களில் கோயிலுக்கு 52 கோடியே 55 லட்சம் ரூபாய் மொத்த வருவாயாக கிடைத்துள்ளதாக தேவஸம் போர்டு தலைவர் கே. ஆனந்த கோபன் தெரிவித்துள்ளார்.
இதில் சபரிமலை பிரசாதங்களான அப்பம் மூலம் ரூ.2.58 கோடி, அரவணை மூலம் ரூ.23.57 கோடி, காணிக்கையாக ரூ.12.73 கோடி, அறை வாடகையாக ரூ. 48.84 லட்சம், அபிஷேகம் மூலம் ரூ. 31.87 லட்சம் கிடைத்துள்ளது. கோவிட் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் இருந்த கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் காலத்தில் இதுவரையிலான வருவாய் ரூ. 9.92 கோடியாக மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் இது நாள் வரை ரூ. 43.33 கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது. பக்தர்களின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப கோயில் பிரசாதங்களான அப்பம், அரவணை அடுத்த 20 நாட்களுக்கு 51 லட்சம் கண்டெய்னர்கள் இருப்பு உள்ளதாக தேவஸம் போர்டு தலைவர் கே. ஆன்ந்த கோபன் தெரிவித்துள்ளார்.