சிவிங்கிப் புலி: 70 ஆண்டுகளுக்கு முன் அழிந்த விலங்கினமாக சிவிங்கிப்புலிகளின் இனம் இந்தியாவில் அறிவிக்கப்பட்டது. இப்புலி இனங்களை மீட்கும் பொருட்டு பிரதமர் மோடி அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகள் இந்தியாவிற்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. அவைகள் கடந்த மாதம் 17ம் தேதி மத்தியபிரதேசத்திலுள்ள குனே உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி அவர்களால் கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டன. இவற்றில் ஒரு பெண் சிவிங்கிப்புலிக்கு மோடி ‘ஆஷா’ என்று பெயர் சூட்டினார். மற்ற சிவிங்கிப்புலிகளுக்கு இந்திய பெயர்களை பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் மோடி அவர்கள் பெயர் சூட்டிய ஆஷா கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் செயல்பாடுகள், அறிகுறிகள், ஹார்மோன்கள் ஆகியவை கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகளை காட்டுவதாகவும், அதனை இம்மாத இறுதியில்தான் உறுதிபடுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். இவைகள் அழிந்த இனம் என்பதனால் அதிகாரிகள் சிவிங்கிப்புலிகளை தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஆஷா கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் முதல் சிவிங்கிப்புலிக் குட்டியை பிரசவித்த பெருமை ஆஷாவையே சென்றடையும்.
நமீபியாவில் இருந்து கொண்டு வரும்போதே இந்த சிவிங்கிப்புலி கர்ப்பமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றும், தற்போது அந்தப் புலி தனியாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இருப்பிடத்தில் ஒரு சிறிய குடிசை அமைக்கப்படும் என்றும், சிவிங்கிப்புலிகள் பாதுகாப்பு நிதியத்தின் இயக்குநர் ஜெனரல் லவுரி மார்க்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆஷா கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அது நமீபியாவில் இருந்து நமக்கு கிடைத்த இன்னொரு பரிசு என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சிவிங்கிப்புலிக் குட்டி இந்தியாவிற்கு வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.