ஒற்றுமை யாத்திரை: இந்திய ஒற்றுமை பாத யாத்திரை பயணத்தை குமரியில் கடந்த மாதம் 7ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழகம் மற்றும் கேரளாவில் தனது நடைபயணத்தை முடித்துக் கொண்டு தற்போது கர்நாடகாவில் நடைபயணம் செய்து வருகிறார். இம்மாநிலத்தில் 21 நாட்களில் 521 கிமீ நடந்து சென்று மக்களை சந்திக்க உள்ளார். இந்த பாத யாத்திரையில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மைசூருக்கு வந்தார். இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பின் நேற்று காலை பெள்ளாலே கிராமத்தில் இருந்து ராகுல் நடைபயணத்தை தொடங்கினார். அம்ருத்ஹள்ளி கிராமத்துக்குள் அவர் சென்றபோது, சோனியாவும் அங்கு வந்து சேர்ந்தார்.
ராகுலுடன் சேர்ந்து 12 நிமிடங்கள் உற்சாகமாக நடந்த சோனியா பிறகு காரில் சென்றார். சிறிது நேரம் கழித்து காரில் இருந்து இறங்கி மீண்டும் நடந்தார். சாலையோர கடைக்கு சென்று காபி குடித்தார். சோனியா அவர்கள் 9கிமீ தூரம் வரை நடந்து சென்றார். சமீபத்தில் தான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியதால் அவரை நடக்க வேண்டாம் என்று ராகுல் கூறியும் சோனியா சில கிமீகள் நடைபயணத்தை மேற்கொண்டார். சோனியா மற்றும் ராகுலுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நடந்தனர். நாளைய நடைபயணத்தில் பிரியங்கா காந்தியும் பங்கேற்று நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடைபயணத்தின் போது தாய் -மகனிடையே நிலவிய பாசப்பிணைப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதையாத்திரையின் போது சோனியா அணிந்திருந்த ஷீவின் லேஸ் அவிழ்ந்ததால் அவர் நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதை கவனித்த ராகுல் காந்தி கீழே குனிந்து ஷீலேஸை கட்டி விட்டார். பாதயாத்திரையில் தாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். தாய்-மகன் இடையேயான இந்த பாசம்தான் தற்போது வைரலாகி வருகிறது.