கோத்தபயவை வெளியேற்றக் கோரி மக்கள் மாலத்தீவில் போராட்டம். இலங்கையிலிருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கடந்த 9ம் தேதியான சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.
ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய, ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை இன்று (ஜூலை 13) அதிபர் கோத்தபய ராஜிநாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவர்தனா தெரிவித்திருந்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் தம்பி பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு தப்பி செல்ல முயன்றார். இவர் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் தப்பி செல்ல திட்டமிட்டு, கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். போராட்டக்காரர்கள் பசில் ராஜபக்ச தப்பி செல்வதை கண்டுபிடித்து அவரைத் தடுத்து நிறுத்தினர். அவரைத் தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் பசில் ராஜபக்சவை விமான நிலையத்திலேயே சிறை வைத்தனர்.
இன்று பதவி விலகுவதாக அறிவித்திருந்த கோத்தபய நேற்று மாலையே இலங்கையை விட்டு மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த அந்நாட்டு மக்கள் அவரை வெளியேற்றக்கோரி அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.