ராகுல் யாத்திரை: இந்திர காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நாளை நடைபெறும் ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கிய இந்த பயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிரா சென்றுள்ளது. அம்மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ள ராகுலுடன் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே பிரபல நடிகைகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு நாளைய ராகுல் காந்தியின் நடைபயணத்தில் காங்கிரஸ், அதன் சார்புடைய பெண் நிர்வாகிகள், பெண் தொண்டர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த கட்சியின் பெண் எம்பிக்கள், எம்எல்ஏக்களும் பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.